
இரசாயன உரங்களின் பற்றாக்குறை இருந்த போதிலும் 2020 ஆம் ஆண்டினை விட 2021 ஆம் ஆண்டில் மொத்த தேயிலை உற்பத்தி 21 மில்லியனால் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டம் தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவையின் ஆலோசனை குழுக்கூட்டத்தில கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, “இரசாயன உரத் தட்டுப்பாட்டினால் மாத்தறை மற்றும் ஏனைய பிரதேசங்களிலுள்ள சிறு தேயிலை விவசாயிகள் பலர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும் இரசாயன உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தேயிலைத் தோட்டங்களுக்கு இயற்கை உரங்களை வழங்கும் முறையான செயற்பாட்டை அரசாங்கம் பேணுவது பொருத்தமானது” என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளதாவது, “தற்போதுள்ள சவால்களுக்கு முகங்கொடுத்து தேயிலை தொழிற்துறையின் அபிவிருத்திக்காக ஒருங்கிணைந்த போசாக்கு முகாமைத்துவ வேலைத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு தயாராக உள்ளது.
அத்துடன், தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு இரசாயன உரங்கள் மட்டுமன்றி நிழல், நீர், மண் காரணிகளும் மிகவும் அவசியமானவையாகும்.
இதேவேளை நாட்டில் இரசாயன உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் தேயிலையின் மொத்த உற்பத்தி 21 மில்லியனால் அதிகரித்துள்ளது.
மேலும் தற்போதைய உலகளாவிய நிலைமைகளின் கீழ் இரசாயன உரங்களின் விலை வேகமாக குறையும் என்பதுடன் சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து தேயிலை தோட்டங்களுக்கு நீர் விநியோகத்தை வழங்குவதற்கான செலவில் 50 சதவீதத்தை அரசாங்கம் வழங்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.





