
தேசிய ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினராக ஆசிரியர் அலியார் பைஸர் தெரிவு செய்யப்பட்டு, கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கத்தின் ஸ்தாபகரும், பொதுச்செயலாளரும் இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளரும், சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகரும் பொதுச் செயலாளருமான அலியார் பைஸர் தேசிய ஒலிம்பிக் கவுன்சிலின் கல்விக் குழு உறுப்பினராக 2022 முதல் 2026 வரையான காலப்பகுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரான அலியார் பைஸர், அக்கல்லூரியின் முன்னாள் விளையாட்டுக் குழு தலைவராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
மேலும், உடற்கல்வி ஆசிரியராக நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் கடமையாற்றி வரும் அலியார் பைஸர், இலங்கையின் தேசிய விளையாட்டுச் சங்கங்களையும் சம்மேளனங்களையும் ஆளும் நிறுவனமான தேசிய ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாண விளையாட்டுத் துறைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அதிகமான வீரர்களுக்கு விளையாட்டுத்துறை சார் தொழிற்றகைமைகளை ஏற்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வாய்ப்புக்களைப் பெற வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ள இவர், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பல விளையாட்டு ஆளுமைகளையும் உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





