
பரீட்சை மேற்ப்பார்வையார்களை நியமிக்கும் பொறுப்பு கனிஸ்ட தரத்தில் இருக்கின்ற கல்விப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொ.உதயரூபன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் சிரேஸ்ட தரத்தில் இருக்கின்ற கல்விப் பணிப்பாளர்கள் இருக்கின்ற நிலையில் கனிஸ்ட தரத்தில் இருக்கின்ற கல்விப் பணிப்பாளரிடம் பரீட்சை மேற்ப்பார்வையார்களை நியமிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேவேளை அண்மையில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் இணைந்த கணிதம் உயர்தரப் பரீட்சையின்போது இடம்பெற்ற குழறுபடி தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் அன்றைய தினம் பிரதி பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பரீட்சையில் கடமையாற்றியவர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக எமது பொதுச் செயலாளரிடம் விளக்கியிருந்தார்.
ஆனாலும் இந்த மேற்பார்வையாளர்களை யார் நியமித்தது என்பது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் பரீட்சைகள் ஆணையாளரும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.
ஏனெனில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பெரும்பாலான அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த வருடம் கடமைப் பொறுப்புகள் கையளிக்கப்படவில்லை.
பரீட்சை தொடர்பில் நீண்ட காலம் அனுபவத்துடன் மேற்பார்வையாளர்களாகக் கடமையாற்றியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, புதிதாக நியமனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.
அதேநேரம் பரீட்சை மேற்பார்வை கடமைகளில் முழு நேரமாக ஈடுபட வேண்டியவர்கள், நேற்றைய தினம் பரீட்சை பகுப்பாய்வு என்ற சொல்லி மட்டக்களப்பு கல்வி வலயத்தில் நடத்துகின்றார்கள்.
இது தொடர்பில் நேரடியாக மாகாணக் கல்விப் பணிப்பாளரிடமும் பிரதிப் பரீட்சை ஆணையாளரிடமும் தெரிவித்திருந்தோம். அவர் முழு நேரமும் பரீட்சைக் கடமையில் ஈடபட வேண்டியவர் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளைப் பகுப்பாய்வு செய்யும் கடமையில் எவ்வாறு ஈடுபட முடியும்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்வது மட்டுமல்லாமல் இந்த மாணவர்களுக்குப் பொருத்தமான நடவடிக்கையை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் நாங்கள் பரீட்சைகள் பிரதி ஆணையாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், கல்விச் செயலாளர் ஆகியோரிடம் தெரிவித்திருக்கின்றோம் மேலும் மாகாண ஆளுநருடனும் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.





