மக்கள் அரசியல் ரீதியிலான தீர்மானத்தை முன்னெடுக்க தயார்- திஸ்ஸ விதாரண

அரசியல் ரீதியிலான தீர்மானத்தை முன்னெடுக்க நாட்டு மக்கள் தயார் நிலையில் இருக்கின்றார்கள். ஆகவே தேர்தலை நடத்த வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் மாறுப்பட்ட நிலைப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.

மேலும், நெருக்கடியான சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் அரசியல் ரீதியிலான தீர்மானங்களை முன்னெடுப்பார்கள்.

அந்தவகையில் தற்போது தேர்தல் ஒன்றினை அரசாங்கம் நடத்துமாயின், மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பது சந்தேகமேயாகும்.

இதற்கு காரணம் கொரோனா அச்சுறுத்தலின் பின்னரான காலப்பகுதியில் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அத்தகைய மக்களின் நலன் குறித்து வரவு- செலவு திட்டத்தில் கூட எவ்வித நலன்புரி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

மேலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்தாமல் மன்றங்களின் பதவி காலத்தை மேலும் ஒருவருட காலத்திற்கு அரசாங்கம் நீடித்துள்ளதுடன் அதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்த பின்னணியில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது மொத்த சனத்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆகையினால், தேர்தலை பிற்போடுவதற்கு கொரோனா தொற்றுப்பரவல் ஒரு காரணியாக அமையாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply