உள்ளூர் வளர்ச்சி ஆதரவு திட்டத்தில் கல்முனை முற்றாக புறக்கணிப்பு: அப்துல் மனாப்

உள்ளூர் வளர்ச்சி ஆதரவு திட்டத்தில் கல்முனை முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப் கவலை வெளியிட்டுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அப்துல் மனாப் மேலும் கூறியுள்ளதாவது, “திட்டமிடலின்போது உள்வாங்கப்பட்ட கல்முனை திட்டம், அமுல்படுத்தப்பட்டபோது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் தலையிடுமாறு பிரதிமுதல்வர் ரஹ்மத் மன்சூர் உட்பட மாநகரத்தை ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சகல உறுப்பினர்களிடமும் தனிப்பட்ட முறையிலும் பேசினேன். எல்லோரும் மௌனமாக இருக்கிறார்கள்.

கல்முனை மாநகரசபையினால் திட்டத்தின் ஆரம்பத்தில் சாய்ந்தமருத்துக்கு பாலமொன்றும் மருதமுனை மற்றும் கல்முனைக்கு தலா ஒரு கலாசார மண்டபமும் தமிழ் மக்களுக்கான ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்திக்கும் என கலந்துரையாடல்கள் நடைபெற்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சாய்ந்தமருது, மருதமுனை ஆகிய பிரதேசங்களின் முதல்கட்ட வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கல்முனை முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மாநகர சபையினால் வரி அறவிடுவதில் மட்டுமே கல்முனைக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது.

மேலும் கல்முனை மாநகரில் கலாசார மண்டபமொன்றை கட்ட கல்முனையை சேர்ந்த சகல மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துரையாடி, கிரீன்பீல்ட் பிரதேசத்தில் அமைக்க திட்டமிட்டோம். ஆனால் அந்த திட்டங்களில் தொடர்ச்சியாக கல்முனை புறக்கணிக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளமுடியாது.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த 2021 டிசம்பர் மாத மாநகரசபை அமர்வில் கேள்வியெழுப்பினேன்.2022 இல் கல்முனைக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது ஏனைய மூன்று ஊர்களுக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப வேலைகள் நடக்கிறது. கல்முனையில் எதுவும் நடக்கவில்லை.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி கல்முனைக்கு நீதியை பெற்றுத்தர முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply