
இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டுழியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் மாபெரும் போராட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
எனினும், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றதோடு, குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே நேற்று மாலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றது.
இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 ராமேஸ்வர மீனவர்களையும் கைது செய்து இரணைதீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
குறித்த விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரையும் கிளிநொச்சி; மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு பின் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று மாலை சிறையில் அடைக்கப்படுவார்கள் என கிளிநொச்சி மீன் வளத்துறை அதிகாரிகள் தெவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை தனுஸ்கோடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடிததுடன், அவர்களுடைய மீன்பிடி வலைகளை நடுக்கடலில் வெட்டி வீசியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் மீன் பிடிக்க சென்ற படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து வேலை நிறுத்தப்போராட்டம், ரயில் மறியல் ஆகியவற்றை ராமேஸ்வரம் மீனவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
தற்போது, மீண்டும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் ராமேஸ்வரம் மீன்பிடி கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 18ந் திகதி முதல் தொடர்ந்து தமிழக மீன்பிடி படகுகளையும் தமிழக மீனவர்களையும் கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.





