புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலை களின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட சம்மேளன நிருவாகிகளுக்கான விஷேட செயலமர்வொன்று இன்று புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எம். அன்வர் அலி, பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட், புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் ரவீந்திர விக்ரமசிங்ஹ, தேசிய போதைப்பொருள் தடுப்பு திட்டமிடல் திணைக்கள தேசிய இணைப்பாளர் என்.ஆர் அமரசிங்ஹ, சிரேஷ்ட வளவாளர் உதய ரூபன், மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ஷெய்ஹ் முஹம்மது இப்ஹாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் போதைப் பொருட்களினால் ஏற்படும் விபரீதங்கள், சமுக சீர்கேடுகளிலிருந்து எவ்வாறு மாணவர்களைப் பாதுகாக்கலாம், அஹதிய்யா பாடசாலைகளின் மூலம் சிறுவர்களுக்கு இந்த கல்வியை எவ்வாறு வழங்கலாம், அதற்கு எந்தெந்த நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பன போன்ற தெளிவூட்டல்களும், வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
அத்துடன், இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சு , கல்வி அமைச்சு, நல்லிணக்க அமைச்சு, புத்த சாசன கலாச்சாரம் மற்றும் மதவிவகார அலுவல்கள் அமைச்சு, முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், நல்லிணக்க அமைச்சு மாவட்ட செயலகம், பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்பை எவ்வாறு பெறுவது என்பன பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மேலும் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் நோய்கள் பற்றி காணொளிகளூடாகவும் விளக்கம் அளிக்கப்பட்டன.
இந்த செயலமர்வில் அஹதிய்யா பாடசாலை களின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட சம்மேளன நிருவாகிகள் 50 பேர் கலந்துகொண்டதாக புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாரூக் பதீன் ஆசிரியர் தெரிவித்தார்.







