
கொழும்பு, பெப் 14: பிலியந்தலையில் உள்ள மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் இல்லத்தின் மீது இனந்தெரியாத குழுவினர் திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் “வெள்ளை நிற வேனில் ஆயுதங்களுடன் வீட்டுக்கு வந்த நான்கு பேர் கொண்ட குழுவொன்று, வீட்டு வாசலில் பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரியின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய பின்னர் ஊடகவியலாளரின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தியவர்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் முகமூடி அணிந்திருந்தனர்’ என்றனர்.
இது தொடர்பாக சமுதித சமரவிக்ரம கூறுகையில் “வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள், வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அப்போது, துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. இது தொடர்பாக பொலிஸாருக்கு உடனடியாக அறிவித்தேன். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்’ என்று அவர் தெரிவித்தார்.
புகழ்பெற்ற ஊடகவியலாளரும் விமர்சகருமான சமுதித சமரவிக்ரம, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்குகிறார். அதில் பல்வேறு அரசியல்வாதிகளை அவர் பேட்டி கண்டு வருகிறார்.





