விடுதலைப் புலிகளைப் போன்றவர்கள்தான் ஜே.வி.பி.யினர்! – நாமல்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியினரும் அழிவை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்களாவர் என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த இரு தரப்பினருக்கும் இடையில் வேறுபாடு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் பாரிய சவால்களை எதிர்க்கொண்டு வெற்றியடைந்துள்ளோம்.

மேலும் மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டம் வெற்றிப் பெற்றுள்ளமை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள பிரதான வெற்றியாகும்.

ஆனால் எதிர்க்கட்சி, அரசாங்கத்தின் அனைத்து செயற்திட்டங்களையும் விமர்சிப்பதனை தனது கொள்கையாக வைத்துள்ளமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் மக்களுக்காக அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் போது அதனை விமர்சிப்பது தவறான செயற்பாடாகும்.

இதேவேளை அழிவை முன்னிலைப்படுத்தி செயற்பட்ட தமிழீழ விடுதலை புலிகளைப் போன்றவர்கள்தான் மக்கள் விடுதலை முன்னணியினரும் ஆவர்.

அதாவது ஆரம்பத்தில் பாரிய கலவரங்களில அவர்கள் ஈடுப்பட்டுள்ளனர் இதன்போது இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டனர் இதனை இன்னும் மக்கள் மறக்கவில்லை.

ஆனால் தற்போது பொருளாதார முன்னேற்றம், மனித உரிமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கருத்து வெளியிடுவது வேடிக்கையாக இருக்கின்றது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply