
கொழும்பு, பெப் 14: சமுர்த்தி கொடுப்பனவை 28 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளது என்று சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண் நிதி, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “பெப்ரவரி மாதம் முதல் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமுர்த்தி கொடுப்பனவு 28 சதவீதத்தால் அதிகரித்து வழங்கப்படும். இதற்காக ரூ. 15,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சமுர்த்தி வங்கிகளில் அதிகரித்த கொடுப்பனவுகள் கிடைக்கும்
நாட்டில் 17 இலட்சத்து 67 ஆயிரம் குடும்பங்கள் சமுர்த்தி கொடுப்பனவை பெறுகின்றன. இவர்களுக்காக சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை 28 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இதுவரை ரூ.3,500 கொடுப்பனவு பெற்ற குடும்பங்களுக்கு ரூ. 4,500, ரூ.2,500 பெற்ற குடும்பத்துக்கு ரூ.3,200, ரூ.1,500 பெற்ற குடும்பத்துக்கு ரூ.1,900 வழங்கப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.





