
இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை தீயிட்டு எரித்து மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் கும்பல் ஒன்றினால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாகாணம் – கானேவால் மாவட்டத்தில் சனிக்கிழமை இந்தக் கொலை இடம்பெற்றது.
இக்கொலை தொடர்பாக 80க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரில் மத நிந்தனை செய்ததாக இலங்கையர் ஒருவர் அடித்து, எரித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இரண்டு மாதங்களுக்குள் இவ்வாறான மற்றொரு படுகொலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த நபரை இழுத்துச் சென்றே வன்முறைக் கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது. கொல்லப்பட்டவரின் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை, இறுதி சடங்கு நடந்தது.
இந்த வழக்கு சட்ட ரீதியாக கடுமையாக கையாளப்படும் என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இறந்தவரின் உயிரைப் பாதுகாக்க தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக அறிக்கை கோரியுள்ளார்.
சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்வோருக்கு எதிராக பாகிஸ்தான் அரசு துளியும் சகிப்புத்தன்மை காட்டாது எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நபரை பொலிஸார் தேடிச் சென்றபோது அவர் மரமொன்றில் கட்டித் தொங்கவிடப்பட்டு இருந்தார்.
கொல்லப்பட்ட நபரின் வயது நாற்பதுகளில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தடிகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை கொண்டிருந்த கிராமவாசிகள் அந்த நபரைக் கொலை செய்து அவரது உடலை மரமொன்றில் தொங்க விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட நபர் கடந்த 15 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக சம்பவம் நடந்த பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் தலைமை அதிகாரி முனவர் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.





