நாடு அதல பாதாளத்தில் தள்ளப்பட்ட பின்னரே யதார்த்தம் மக்களுக்கு விளங்குகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கட்சிக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பீல்ட் மார்ஷல் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்திற்கான நேர்மறையான பிம்பங்களை உருவாக்காமல் கடந்த கால மகிமையைப் பற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
இன்று நமக்கு ஒரு புதிய தலைவர் இருக்கிறார். இந்த தலைவரும் எதிர்கால அரசாங்கத்தில் அமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் மற்றவர்களும் தங்கள் பிம்பங்களை கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த தலைவர்கள் தங்கள் செயல்திறனை வெளிப்படுத்த முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் இலங்கையில் நெருக்கடி ஆரம்பமாகியது.
ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு நாட்டை ஆண்ட அரசியல்வாதிகள், தங்கள் சொந்த குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினர்.
மேலும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் செல்வத்தைப் பதுக்கி வைப்பதில் மட்டுமே அவர்கள் ஆர்வம் காட்டினர்.
ஆனாலும் இந்நாட்டு மக்கள் இதை அவ்வளவு தீவிரமாக உணர்ந்ததில்லை.
ஆனால் தற்போது நாடு அதல பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. யதார்த்தம் இப்போதுதான் மக்களுக்குப் புலனாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.





