9 வது நாளாக தொடரும் சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்

கொழும்பு, பெப் 14: மருத்துவ உதவியாளர்கள், துணை மருத்துவ தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் 9 வது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்கிறது.

சம்பள உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து துணை மருத்துவ சேவை பணியாளர்கள் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இந்த பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

சுகாதாரப் பணியாளர்களின் போராட்டத்தால், நோயாளிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சங்கம், அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோரின் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இரண்டு தடை உத்தரவுகளை கடந்த வியாழக்கிழமை பிறப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை சனிக்கிழமை மாலை தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால், ஏனைய தொழிற்சங்கங்கள் ஒன்பதாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.

கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தாதியர், துணை மற்றும் துணை மருத்துவ சேவைகள் உட்பட சுகாதாரத் துறையில் உள்ள 18 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 65,000 சுகாதார ஊழியர்கள் இணைந்திருந்தனர்.

இந்நிலையில், அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் தவிர மற்றைய 17 சங்கங்களும் போராட்டத்தை தொடர்கிறார்கள்.

Leave a Reply