
யாழ்ப்பாணம் ஆறுகால்மடப்பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று திடீரென வளைந்து திரும்பி மானிப்பாய் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி எதிர்த்திசையிலிருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு கால்முறிந்துள்ளது. அவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர். காரின் சாரதியும் காயமடைந்தார்.
இருவரும் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வாகனங்கள் இரண்டும் கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளன. மேலும் கார் மோதி முறிந்த நிலையில் காணப்பட்ட மின்கம்பத்தை சீர் செய்யும் நடவடிக்கையை மின்சார சபையினர் விரைந்து முன்னெடுத்தனர்.





