
திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் பகுதியில் மிகப்பெரியளவில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சொரூபம் இந்து – கிறிஸ்தவ மக்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்த காரணமாக அமைந்து விட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க தலமான திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் பகுதியில் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வெர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கை மேலும் தெரிவித்ததாவது,
சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க விரும்பும் ஒருசிலரின் செயற்பாடு காரணமாக ஒட்டுமொத்த சமூகத்தினதும் ஒற்றுமை கேள்விக்குட்படுத்தப்படுகிறது.
சமூகத்தின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உண்டு. எனவே இவ்விடயத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு தலத்தின் தனித்துவத்தை பாதிக்கும் வகையில் மற்றொரு மத ஸ்தானம் அமைப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்கக்கூடாது. அனுமதி இன்றி இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் உரிய சட்ட அணுகல் மூலம் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும். அதைவிடுத்து மதங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி வேடிக்கை பார்ப்பதனை அனுமதிக்க முடியாது.
அத்துடன் அண்மைக்காலமாக இந்து ஆலய சிலைகள் உடைக்கப்படுவதுடன், திருடப்படுவதும் அனைவரும் அறிந்த ஒன்றே.
இவ்வாறான செயற்பாடுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒற்றுமையையும் சிதைத்து விடும். சமூக சிதைவிற்கு வழிவகுக்காது மத ரீதியான நல்லிணக்கத்தை வளர்க்க முயற்சிக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.- என்றுள்ளது.
போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியாது! – பீரிஸ்





