ETF, EPF இற்கு மிகைவரி கிடையாது; நிதியமைச்சர் விளக்கம்

ETF, EPF இற்கு மிகைவரி கிடையாது; நிதியமைச்சர் விளக்கம்

கிராம அலுவலர் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் 40 குடும்பங்களுக்கு ரூ. 2,000 பெறுமதியான பொருட்கள்

  • 115,867 தோட்டக் குடும்பங்களுக்கு மாதாந்தம் சலுகை விலையில் 15 கி.கி. கோதுமை மா
  • வீதிகளில் துவிச்சக்கரவண்டிப் பாதை, நடைபாதைகள்
  • அத்தியாவசிய பொருட்களை சந்தைக்கு விநியோகிக்க நிதியமைச்சர் தலைமையில் 4 அமைச்சர்கள், 3 இராஜாங்க அமைச்சர்கள் கொண்ட குழு
  • பல்வேறு விடயங்கள் தொடர்பான இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை உப குழுக்கள்
    இவ்வார (14) அமைச்சரவைக் கூட்டத்தில் 13 முடிவுகள்
    2021 ஆம் ஆண்டில், ரூ. 2,000 மில்லியன் இற்கு அதிக நிகர இலாபம் ஈட்டும் தனியாட்கள் மற்றும் கம்பனிகளிடமிருந்து 25% வீதமான மிகைவரி தொடர்பாக தன்னால் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையின் கீழ் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) உள்ளிட்ட 9 நிதியங்கள் உட்படுத்தப்படாதென நிதி அமைச்சர் அமைச்சரவைக்குத் தெளிவூட்டியுள்ளார். அதற்கமைய, ஒருசில தரப்பினரால் அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புக்கள் அடிப்படையற்றதெனவும் நிதி அமைச்சர் மேலும் அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார்.
    நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
    அதற்கமைய இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 13 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
  1. வீட்டுமட்ட பொருளாதாரப் பாதுகாப்பு (நிவாரணப் பொதி) வேலைத்திட்டம்
    2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட விரிவான பொருளாதார அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஒரு வேலைத்திட்டமாக வீட்டுமட்ட பொருளாதாரப் பாதுகாப்பு (நிவாரணப் பொதி) வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் குறைப்பதற்காக ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் குறைந்த வருமானங் கொண்ட 40 குடும்பங்களை விசேடமான அளவுகோல்களைப் பயன்படுத்தி குறித்த பிரதேச செயலாளரின் பரிந்தரைக்கமைய தெரிவு செய்து, அக்குடும்பங்களுக்கு 2,000 ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடிய வகையில் பயனாளிக் குடும்பங்களுக்கு டிஜிட்டல் அட்டையை வழங்குவதுடன், அவ்வட்டையைப் பயன்படுத்தி வீட்டுமட்டப் பொருளாதார அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களை அடிப்படையாகக் கொண்ட சிறியளவிலான பல்பொருள் விற்பனை நிலையங்கள் மூலமாக உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும். அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  2. தோட்டத் தொழிலாளர்களுக்கான கோதுமை மா நிவாரணம் வழங்கல்
    நிதி அமைச்சர் அவர்களால் “பொதுமக்கள் முகங்கொடுப்பதற்கு நேரிட்டுள்ள பொருளாதார சிரமங்களைக் குறைப்பதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல்” எனும் தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்கான முன்மொழிவுகள் 2022 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
    குறித்த முன்மொழிவுகளில் தோட்டத் தொழிலாளர்களின் குழும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் வழங்குதல் தொடர்பான யோசனை வர்த்தக அமைச்சரின் தலைமையிலான குழு கவனத்தில் கொண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது. அப்பரிந்துரைகளின் பிரகாரம் அடையாளங் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply