கச்ச தீவு திருவிழாவில் இந்திய பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: அரச அதிபர்

யாழ்ப்பாணம், பெப் 15: வரும் பங்குனி மாதம் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க புனித கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விழாவில், இந்திய பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா தொடர்பான ஊடக சந்திப்பு யாழ் மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் பேசும்போதே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் “தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, உள்ளூரைச் சேர்ந்த 500 பக்தர்கள் மட்டுமே பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தடுப்பூசியின் இரண்டு ஊசிகளும், பூஸ்டர் டோஸும் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள், தடுப்பூசி அட்டையை கைவசம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

திருவிழாவுடன் இணைந்த மற்றைய செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கூட்டுறவு கடைகள் மூலமாக மட்டுமே, மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply