பனை, தென்னை உற்பத்திகளை போத்தலில் அடைத்து விற்பனை செய்ய அனுமதி: டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

கொழும்பு, பெப் 15: கிளிநொச்சியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, கிளிநொச்சி பனை தென்னை வளக் கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை சந்தித்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என்றும், இதனால் உற்பத்திகள் வீணாக விரயமாகுவதாகவும் கிளிநொச்சி பனை தென்னை வளக் கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக துறைசார் திணைக்களத்தை தொடர்புகொண்ட அமைச்சர், இந்த விஷயம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் அதற்காக அனுமதியை ஒரு வாரகாலத்தில் கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.

Leave a Reply