கொக்கிளாய் பகுதியில் வாடியமைத்து கரைவலைத்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் இன்று கொக்கிளாய் கடற்கரையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த பகுதியில் கணியமணல் அகழ்வு இடம்பெற்றால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு நாட்டின் ஜனாதிபதியை கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்;பட்ட கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான கிராமங்களில் 12 கிலோமீற்றர் நீளமான கடற்கரையுடன் இணைந்த கிராம மக்களின் சுமார் 1000 ஏக்கர் பூர்வீக நிலங்கள் கனிய மணல் அகழ்வு என்ற பெயரில் அபகரிக்க நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று சனிக்கிழமை கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முன்பாக இருந்து முகத்துவாரம் பகுதியில் மக்களின் 44 ஏக்கர் காணியை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட் இன் கொக்கிளாய் பொறித்தொகுதி வரை இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே சிங்கள குடியேற்றங்களாலும், இராணுவ ஆக்கிரமிப்பாலும் மகாவலி எல் வலயத்தாலும், வன ஜீவராசிகள் திணைக்களம், வளவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற அரச இயந்திரங்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பால் இருப்பு கேள்விக்குள்ளாகி வரும் தமிழ் மக்களின் எல்லை கிராமங்களில் மேலதிகமாக கனிய மணல் கூட்டுதாபனத்துக்கு என மிகுதி நிலங்களையும் அபகரிக்கும் வேலையை அரசு மிக திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது.
எனவே தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த நிலங்களை அபகரிப்பததை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொக்கிளாய் கிராம மக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.









