இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது: ஜி.எல்.பீரிஸ்

கொழும்பு, பெப் 15: போர்க்குற்றம் தொடர்பாக இலங்கையை எந்தவொரு சூழ்நிலையிலும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு மனித உரிமைப் பிரச்சினையை கருவியாக சிலர் பயன்படுத்துகின்றனர். இலங்கை நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளில் கூட ஜெனிவா தலையிடுகிறது. ஆனால், இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சட்டங்கள் மிகத் தெளிவாக உள்ளன. இதனால், இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.

அரசாங்கம், இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு அதிருப்தி அளிக்கிறது.

அதிகாரப் பகிர்வு, இராணுவம், பொலிஸ், மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான அதிகார சமநிலை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அதன் திருத்தங்கள் என்பன இலங்கை நாடாளுமன்றமும் இலங்கை மக்களும் தீர்மானிக்க வேண்டிய விடயங்கள்.

உள்ளுர் பொறிமுறைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்குப் பதிலாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, தீர்வுகளைத் திணிக்க முயல்கிறது. இது நீடிக்காது. ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு முழுமையாக ஒத்துழைக்க வழங்க இலங்கை தயாராக உள்ளது. ஆனால், ஜெனிவாவால் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது என்றார் அவர்.

Leave a Reply