கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாளை வெள்ளிக்கிழமை (28) காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்து பேருந்துகளில் ஏற்றப்பட்ட பகுதியில் ஆரம்பிக்கும் கவனயீப்பு பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நாளைய மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் பல்வேறு தரப்பிலும் இருந்தும் முழுமையான ஆதரவு கிடைக்கப்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அரசியல் கடசிகள் ,தனியார் போக்குவரத்து சங்கங்கள்,வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) முன்னெடுக்கப்படவுள்ள வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பில் அனைவரும் இணைந்து முன்னெடுக்கவுள்ள பாரிய போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பூரண ஆதரவு வழங்குவதோடு நாளை (28) போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறாது என முல்லைத்தீவு மாவட்டதனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம், முல்லைத்தீவு வர்த்தக சங்கம்,மல்லாவி வர்த்தக சங்கம்,உடையார்கட்டு வர்த்தக சங்கம்,மாங்குளம் வர்த்தக சங்கம், ஒட்டுசுட்டான் வர்த்தக சங்கம் , உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக சங்கங்கள் தங்களது கடைகளை மூடி நாளைய போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.





