தமிழ்த் தேசிய கட்சிகளுக்குள் பிளவு?

யாழ்ப்பாணம், பெப்.17:

தமிழ்த் தேசிய கட்சிகளின் அடுத்த நகர்வு தொடர்பான கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. மேலும் அக் கட்சியின் பிரதிநிதிகள் யாரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இக் கட்சிகளுக்குள் கொள்கை அளவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் “ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்” எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனும், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும், தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தவும் பங்கேற்று உரையாற்றியிருந்தனர்.

அத்துடன் யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறைத்தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான யதீந்திரா, நிலாந்தன் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.

ஆறு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பாரதப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டல்களை வழங்குவதற்காக இந்த மக்கள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பதுடன் அக்கட்சியின் பிரதிநிதிகள் யாரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்தக் கருத்தரங்கில் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மாவை கலந்து கொள்ளாதது பாரத பிரதமருக்கு கடிதம் அனுப்பிய விவகாரத்தில், இக் கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேச முற்பட்டோம் அதற்கு பதிலளிக்கவில்லை.

Leave a Reply