முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முற்படும் பிள்ளையான்…!எம்.ஐ.ஹாமித் மெளலவி கண்டனம்…!samugammedia

முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க பிள்ளையான் எம்.பி முற்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூகச்செயற்பாட்டளருமான எம்.ஐ.ஹாமித் மெளலவி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ஹன்ஸீர் ஆசாத் மௌலானாவை முஸ்லிம் பெயர் தாங்கி என்பதற்காக வேண்டி  தனது கைக்கூலியாக வைத்து மிக நீண்ட காலமாகப்  பயன்படுத்தி வந்தமை உலகறிந்த விடயம்.

அவர் பிள்ளையானுக்கெதிரான (எம்பி) உண்மையை வெளியுலகத்துக்குச் சொல்லி விட்டார் என்பதற்காக இன்று மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் மீது வீண் பழியை திருப்புவதற்கு முயற்சிப்பதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

சஹ்ரான் என்ற தீவிரவாதக்கும்பலையும், அவர்களது செயற்பாடுகளையும் இலங்கைத்திருநாட்டில் வாழும் எந்த முஸ்லிம் சமூகமும் எச்சந்தர்ப்பத்திலும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தான் அவனையும் அவனது கும்பலையும் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகம் பாதுகாப்புப்படையிடம் காட்டிக் கொடுத்ததோடு, அவனது ஜனாசாவையும் கையேற்க மறுத்த வரலாற்றை யாரும் மறந்து விடக்கூடாது.

அவனது தீவிரவாத சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் தெளிவாக அறிந்து கொண்ட நீங்கள் அவனை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற திட்டங்களையே தீட்டியுள்ளீர்கள் என்பதை ஆசாத் மௌலானாவின் வாக்குமூலமும் தெளிவாக்குகின்றது.

கடந்த காலங்களில் பிள்ளையான் புலிப்பயங்கரவாதிகளோடு இருந்த காலப்பகுதியில்  முஸ்லிம் சமூகத்திற்கெதிராகச் செயல்பட்டு வந்ததையும், இன்று அரசியல் அதிகாரத்திலிருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கெதிராக செயற்படுவதையும் வைத்துப்பார்க்கின்ற போது இதன் சூத்திரதாரியாக பிள்ளையான் இருக்கக்கூடும் என்ற பலத்த சந்தேகம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது.

இது விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்களுக்கு நீதி கிடைப்பதற்காக வேண்டி பக்கச்சார்பற்ற நீதியான, நியாயமான சர்வதேச விசாரணை அவசியம் தேவையென்பதே பாதிக்கப்பட்ட சமூகங்களின் இன்றைய நிலைப்பாடாகும் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply