யாழில் 24 பவுண் திருட்டு: மூன்று பேர் கைது

யாழ்ப்பாணம், பெப்.19

யாழ்.நகரை அண்மித்த பிறவுண் வீதியில் பூசகர் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த 3 கொள்ளையர்கள் நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 28ம் திகதி பகல் வேளையில்  யாழ்.பிறவுண் வீதியில் அமைந்துள்ள கோவில் குருக்கள் ஒருவரின் வீட்டினுள் புகுந்து திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குருக்கள் வழமைபோல கோவிலுக்கு செல்வதை அவதானித்த  சந்தேகநபர் வீட்டின் முன் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தமையால் பின் பக்கமாக சென்று பின்பக்க கதவை உடைத்து வீட்டின் சாமி அறைக்குள் சென்று அங்கிருந்த 24 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

இதில் தாலி கொடி சங்கில் கைச்சங்கிலி காப்பு போன்ற நகைகள் திருடப்பட்டன. இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.  சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தலைமையிலான குழுவினர் தமது விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் பிரதான சந்தேகநபர் யாழ்.கஸ்தூரியார் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரனையில் திருடப்பட்ட நகைகளை குறித்த திருட்டுக்கு உடந்தையாக இருந்த நபர் ஒருவர் மூலமாக வங்கியில் பணிபுரியும் ஒருவரின் உதவியுடன் வேலணையில் உள்ள
வங்கி ஒன்றில் அடகு வைத்ததாகவும் அடகுவைத்ததன் மூலம் பெறப்பட்ட பணத்தை கொண்டு கெரோயின் கொள்வனவு செய்ததாகவும் அதிக கெரோயின் பயன்பாட்டினால் கெரோயினை உட்கொள்வதற்கு பெருமளவு பணம் தேவைப்படுவதால் இப்படியாக திருட்டுக்களில் ஈடுபடுவதாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.

மேலும் ஒரு நெக்லஸ் மற்றும் காப்பு ஒன்றும் தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்கும் முயற்சியினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். திருடப்பட்ட மிகுதி நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. மேலும் பிரதான சந்தேகநபர் உட்பட உடந்தையளித்த குற்றச்சாட்டில் சுன்னாகம் பகுதியை சேர்ந்த 28 வயது நபரும் நகைகளை அடகு வைக்க உதவிய வேலனை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply