மயிலத்தமடுவில் சிங்களவர்கள் அத்துமீறல்…! மட்டு.மாவட்டத்தில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…!samugammedia

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடுவில் உள்ள களிமடுக்குளம் பகுதியில் அத்துமீறிய சிங்கள பயிர் செய்கையாளர்களினால் நேற்று (11) புதன்கிழமை நெல் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தமிழ் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று காலை 10 மணி முதல் சிங்கள குடியேற்றவாசிகளினால் அத்துமீறிய நெல் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் இந்த பருவகாலத்தில் குறித்த பகுதியில் வழமைபோன்று கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில், P2P பேரெழுச்சி இயக்கத்தின் இணை தலைவர் சீலன் சிவயோகநாதன் தெரிவிக்கையில், 
காலாதிகாலமாக இந்த போகத்தில் மட்டக்களப்பு பகுதியில் நெற் செய்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் உள்ள கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்லும் குறித்த பகுதியிலேயே தற்போது சிங்கள குடியேற்றவாசிகளினால் அத்துமீறிய நெல் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிக்கு கால்நடைகளை இடம்மாற்ற முடியாத நிலைக்கு தமிழ் பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழ் பண்ணையாளர்களினால் கால்நடைகள் இடம்மாற்றம் செய்யப்படாதுவிட்டால் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி, வந்தாறுமூலை, கிரான், வவுணதீவு மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய கமநல சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்டு காணப்படும் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் தமிழ் விவசாயிகள் நெற் செய்கையினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிங்கள குடியேற்றவாசிகளின் அத்துமீறிய நெல் விதைப்பின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் பண்ணையாளர்களுக்கும் தமிழ் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அவ்வாறு விவசாய நடவடிக்கை பாதிக்கப்படுமாயின் அடுத்த வருடம் பாரிய அரிசி தட்டுப்பாட்டினை மட்டக்களப்பு மாவட்டம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply