
கம்பஹா, பெப்.20
கம்பஹா நகரில் உள்ள சகல மேலதிக வகுப்புகள் நடைபெறும் இடங்களும் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில், கம்பஹா நகரில் மேலதிக வகுப்பு நடத்தும் நிறுவனம் ஒன்றின் பெண்கள் கழிவறையில் கமரா பொருத்தப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில், கம்பஹா நகர முதல்வருடன் கலந்துரையாடியுள்ளதாக விசாரணையை முன்னெடுக்கும் பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி மேலும் கூறியதாவது,
நகர முதல்வருக்குள்ள அதிகாரத்திற்கு அமைய விசாரணைகள் நிறைவுறும் வரையில் அந்த நிறுவனத்தினால் நடத்திச் செல்லப்படும் மேலதிக வகுப்பிற்கு தடைவிதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்பினை நடத்தும் குறித்த நிறுவனத்தின் பெண்கள் கழிவறையில் அதி நவீன தொழிநுட்பத்துடன் கூடிய கமரா பொருத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
மாணவி ஒருவரின் தயார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த கமரா கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெண்கள் கழிவறையில் ரகசிய கமராவை பொருத்திய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அவர் கைது செய்யப்பட்டதன் பின்னரே அவர் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியும் . இந்த சம்பவம் தொடர்பில், இதுவரையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர், ஆசிரியர்கள் மற்றும் மேலதிக வகுப்பில் பங்கேற்ற மாணவர்கள் உள்ளிட்ட 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.





