உணர்ச்சிப் பேச்சுக்களையும், வெற்று கோசங்களையும் இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர்..!

நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கி வருகின்ற நிலையில் வேட்பாளர்கள் தமக்கு ஏற்றவாறு பலவாறான கருத்துக்களையும் உசுப்பேற்றல்களையும் கூற முற்படலாம். ஆனாலும் அவர்களது வெற்று பேச்சுக்களை இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வாக்குரிமை மக்களது ஜனநாயக அஸ்திரமாகும். இந்த அஸ்திரத்தை பயன்படுத்தி மக்கள் தமக்கான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதும் அவர்களது உரிமை.

ஆனால் கடந்தகாலங்களில் சுயநலவாதிகளின் உணர்சிப் பேச்சுக்களுக்கு மக்கள் செவி சாய்த்ததன் விழைவாக தமிழ் மக்களின் அரசியல் அதிகார பலம் தவறானவர்களின் கைகளுக்கு சென்றறிருந்தது. இதனால் மக்கள் பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொள்ளம் நிலையும் நேரிட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த காலங்களை போன்று ஏமாற்றுத் தரப்பினரது சுயநலங்களுக்கு எடுபடாது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதே எமது விருப்பாகும்.   

இதேநேரம் எம்மிடம் சிறந்த கொள்கையும் அனுபவம் மிக்க வழிநடத்தலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான பொறிமுறையும் இருக்கின்றது. இதை தற்போது அனைவரும் ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

அதுமட்டுமல்லாது சக தமிழ் அரசியல் தலைமைகள் இன்று எமது கொள்கையான மத்தியி்ல் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது மட்டுமல்லாது நாம் முன்னெடுக்கும் அன்றாடப் பிரச்சினை அபிவிருத்தி அரசியலுரிமை என்ற பொறிமுறைக்கும் வந்துவிட்டனர்.

இது அவர்களது கொள்கையற்றதும், பொறிமுறையற்துமான நிலையுடன் சரியான வழிநடத்தலின்மையையும் காட்டிநிற்கின்றது.

அதுமட்டுமல்லாது பொய்களை கூறி மக்களை ஏமாற்றுவதற்கென கூட்டமைப்பு என்ற போர்வையில் பல்வேறு குழுக்கள் எல்லாம் ஒன்றிணைத்து கட்டப்பட்ட கட்சியும் சிதறுண்டு காணாமல் போய்விட்டது.

ஆனால் ஈ.பி.டி.பியாகிய நாம் வெளிப்படையாகவே எமது நிலைப்பாடுகளை மக்களிடம் கூறிவருகின்றோம்.

அதனடிப்படையில் எமது கடந்தகால மக்கள் நலத்திட்டங்களை மனதில் நிறுத்தி உங்கள் வாக்குகளை எமது வீணைச் சின்னத்துக்கு அளியுங்கள் என நாம் உங்களிடம் கோருகின்றோம்.

அத்துடன் உங்கள் வாக்குகளால் எமது கட்சி அரசியல் ரீதியில் வலுப்பெறும்போது மக்கள் நலத்திட்டங்களை மேலும் துரிதகதியில் முன்னெடுத்துச் செல்லவும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்ளவும் கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம்.

அந்தவகையில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர விரும்பும் தமிழ் மக்கள் தமது எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்ளும் வகையில் கிடைத்துள்ள இந்த நாடாளுமன்ற தேர்தல் என்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது வீணைச் சின்னத்தை பலப்படுத்துங்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *