நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேட்பாளர்களை எச்சரித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் நாட்டில் அமைதி காலம் பிரகடனப்படுத்தப்படும். தேர்தல் சட்டங்களில் அமைதி காலம் தொடர்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதி காலத்தில் நடந்து கொள்ளுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.
அமைதி காலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் உங்களால் நடத்த முடியாது. வீடுகளுக்குச் சென்று வாக்குக் கேட்கவும் முடியாது.
பொதுத் தேர்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் இயலுமையும் இல்லை. அமைதி காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் பட்சத்தில் உங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம்.
எனவே அமைதிகாலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோன்று சமூக ஊடக பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். அமைதி காலத்தில் ஏதேனும் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் உடனடியாக அந்த பதிவுகளை நீக்குமாறு சம்மந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.