பயங்கரவாத சட்டம் உட்பட 20 சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை! நீதி அமைச்சரின் அறிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். என்றார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மாநாடொன்றின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறையின் மீது நம்பிக்கையை கட்டியெழுப்புவது என்பது அரசாங்கம் என்ற அடிப்படையில் எங்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீது மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். 

அது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இந்த நிறுவனங்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது இல்லாமல் போயுள்ளது. 

சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மேலும் விரிவாக்கப்பட வேண்டும். அதேபோன்று வெளிப்படைத்தன்மையும் இருக்கவேண்டும்.  

எங்களுக்கும் மக்களின் பெரும்பான்மை விருப்பம் கிடைத்துள்ளது. அதற்காக நாங்கள் தன்னிச்சையான தீர்மானம் எடுப்போம் என்று கூறவில்லை.

நாங்கள் எந்தத் தீர்மானம் எடுத்தாலும் சகலருடனும் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானம் எடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *