புதிய திவுல்வெவ குளத்தில் நீர்க்கசிவு

கலென்பிந்துனுவெவ, திவுல்வெவ குளத்தின் அணைக்கட்டில் நீர்க்கசிவு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் கரை உடைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இப்பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் திவுல்வெவ குளம் நிரம்பி குளத்தின் மதகுக்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் தெற்கு மதகுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மண் அணையில் நேற்றையதினம் (10) நீர்க் கசிவு ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர், பின்னர் அது பாரிய நீர் வெளியேற்றமாக விரிவடைந்துள்ளது.

மேலும், நிலைமை மோசமடைந்து வருவதால், அதிகாரிகள் திவுல்வெவ மகா வித்தியாலயத்தை தற்காலிகமாக மூடியதோடு, கலென்பிந்துனு வெவ மற்றும் துடுவெவ மற்றும் யகல்லவை இணைக்கும் பிரதான வீதியின் போக்குவரத்தை இடைநிறுத்தியுள்ளனர்.

பொலிசார், இராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து மணல் மூட்டைகளை கொண்டு நீர் வெளியேற்றத்தை தடுத்து கரையை பலப்படுத்தி, நீர் வருவதை கட்டுப்படுத்தியிருந்தனர். ஆயினும், இந்த முயற்சிகள் இன்னும் நீர் வெளியேறுவதைத் தடுக்கவில்லை.

அணை உடைந்தால் பல கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தற்போது குறித்த கிராமத்தில் உள்ள 30 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *