திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களும் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர்.
தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப்பணி பணி முன்னெடுக்கப்பட்டதோடு , அதில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதோடு மாலை வேளை மற்றைய இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் மூதூர் தள வைத்திசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





