கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியை சார்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீதனை விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் கிளிநொச்சி கிளை வலியுறுத்தியுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பாடல் குறித்தும் விமர்சிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஆசிக், சொல்லிசைப் பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமையினை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாக கண்டிக்கிறது.
குறித்த இளைஞன் விதத்திலும் நாட்டிற்கு வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. இந்நிலையில் அவரை வேண்டுமென்றே கைது செய்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழ் முஸ்லீம் மக்களின் குரல்வளையை நசுக்கும் செயற்பாட்டை ஆளும் அரசாங்கம் செய்கின்றது.
இந்தப் பாடல் தவறு எனில் தேர்தல் காலத்தில் மாவீரர்களைப் போற்றுவதும், இயக்கங்களின் தலைவர்களது தாய் தகப்பனைப் போற்றுவதும் அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என பாடல்களை உருவாக்கி வாக்குகளுக்காக தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டி அதன்மூலம் பாராளுமன்றம் சென்றுள்ளனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மூன்று என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் காலத்தில் செயற்பட்ட முறையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகிய பின்னர் செயற்படுகின்ற முறையும் தெளிவாக தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாக காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.





