மாகாணத்திற்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் ஊடாக 2026ம் ஆண்டிற்கான மாகாண கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
80 ஆண்டுகளுக்கும் மேலான கல்விச் சேவையை வழங்கி வரும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி வட மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
“ஒரு நாட்டை நிலையான முறையில் கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய முதலீடு மனித வள மேம்பாடாகும். அந்த மனித வளத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் கல்வியே.
அதனால்தான் எமது அரசாங்கம் கல்வித் துறைக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
மேலும், போதைப்பொருள் வியாபாரிகள் மாணவர்களை இலக்காகக் கொண்டு சமூகத்தை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாணவர்களின் கல்விப் பயணத்தில் நிலவும் சவால்கள் மற்றும் அழுத்தங்களை கருத்தில் கொண்டு கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி முறைமையை மேம்படுத்த அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நிகழ்வின் நிறைவில், கல்லூரியின் வளர்ச்சிக்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் பங்களித்து வரும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் அமைச்சர் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலையின் பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





