கிளிநொச்சி – வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை!

சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான கிளிநொச்சி – வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்

குறித்த பேருந்தின் சேவைகள் தொடர்பிலும், பயணிகளுடனான தகாத நடத்தைகள் தொடர்பிலும் சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதிகார சபை இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. 

இந்த நிலையிலேயே அதிகார சபையால் குறித்த பேருந்துக்கு எதிராக இந்தத் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

கடந்த 30.06.2026 அன்று குறித்த பேருந்தின் சேவையின்போது பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்த விசாரணைகளின் மூலம் பின்வரும் குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன:  

அனுமதிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு ஏற்பச் சேவையில் ஈடுபடாமை.  அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விடப் பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டமை.  வழித்தட அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பாதையைத் தவிர்த்து வேறு பாதையில் சேவையில் ஈடுபட்டமை.  பேருந்தில் பயணித்த பயணிகளுடன் முரண்படும் வகையில் தகாத முறையில் நடந்துகொண்டமை.  மேற்குறிப்பிட்ட குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, உரிய தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தினத்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனருக்கு 7 நாட்களுக்குப் பணித்தடையும் (வேலை நிறுத்தம்) விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் 01.07.2026 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்தப் பேருந்துக்கான கடுமையான நிபந்தனைகளுடனான புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் காலை 9.20 மணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தரித்து நின்று, ஓட்டுதல் குறிப்புத் தாளைப் பதிவுசெய்து காலை 9.50க்குப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட வேண்டும்.  காலை 9.55க்குக் கிளிநொச்சி பொது மருத்துவமனையிலுள்ள நேரக்கணிப்பாளர் நிலையத்தைக் கடந்து, காலை 11.30க்கு வவுனியா பேருந்து நிலையத்தைச் சென்றடைய வேண்டும்.  வவுனியாவிலிருந்து திரும்பும் பயணத்தின்போது, பிற்பகல் 4.15க்கு வவுனியா பேருந்து நிலையத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தரித்து நின்று ஓட்டுதல் தாளைப் பதிவுசெய்து, 4.45க்குப் புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு வெளித்தரிப்பிடத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணிக்க வேண்டும்.  மேலும், பேருந்தில் பணியாற்றும் சாரதி, நடத்துனர்களின் பெயர் விவரங்கள் வழித்தட அனுமதிப் பத்திரத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் தமது தொழில் அடையாள அட்டையை அணிந்திருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

பொதுப் போக்குவரத்தில் பணியாற்றும் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், அதிகார சபையின் விதிகளுக்கு அமைவாகவும் சுய ஒழுக்கத்துடன் பணியாற்ற வேண்டும் எனக் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  

பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ, வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ, அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எவ்வித தயக்கமுமின்றி முறைப்பாடு செய்ய முடியும். இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply