ஷிரந்தியின் கண்ணில் ஒட்டப்பட்ட பிளாஸ்டர் – மருத்துவமனையில் இன்று வெளியாகுமா உண்மை நிலை?

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (9) கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமை காரணமாக நேற்று (8) அவர் சிறைச்சாலை விசேட மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டார்.

இதன்போது வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரைகளுக்கு அமைய, தேசிய கண் மருத்துவமனையின் விசேட மருத்துவரிடம் அவரை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்சவை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்சவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று (08) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.

இதற்கிடையில், ஷிரந்தி ராஜபக்சவின் கண் சிகிச்சை தொடர்பான விடயங்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. அவர் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது கண் சிகிச்சைக்காகவே சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், நாடு திரும்பியபோது அவரது கண்ணில் சிகிச்சைக்கான எவ்வித ப்ளாஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கவில்லை என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன.

எனினும், கடந்த 7ஆம் திகதி அதிகாரிகள் அவரது இல்லத்திற்குச் சென்று விசாரணைகளின் பின்னர் கைது செய்து அழைத்து வந்தபோது, அவரது கண்ணில் ஒட்டப்பட்டிருந்த ப்ளாஸ்டர் தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, குறித்த ப்ளாஸ்டரை போன்றவற்றை அணிந்துகொண்டு கேலியான புகைப்படங்களைப் பகிரும் நடவடிக்கைகளும் சமூக வலைதளங்களில் இடம்பெற்று வருகின்றன.

 

மருத்துவ ரீதியிலோ அல்லது சுகாதார தரப்புக்களில் இருந்தோ ஷிரந்தியின் கண்ணில் ஒட்டப்பட்டிருந்த ப்ளாஸ்டர் தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. 

இந்நிலையில், அவர் இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply