மோதலை முடிவுக்குக் கொண்டுவர 7 நாள் திட்டம்: ஈரான் முன்மொழிவு: அமெரிக்கா நிராகரிப்பு?

அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளுக்குப் பதிலாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கத் தயார் என அறிவிப்பு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஏழு நாள் காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட புதிய திட்டமொன்றை ஈரான் முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி முன்வைத்துள்ளதாகக் கூறப்படும் இந்தத் திட்டத்தில், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்குதல், ஈரானின் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவித்தல் மற்றும் எண்ணெய் விற்பனை மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதற்குப் பதிலாக, ஹோர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறப்பதற்கும், அணுசக்தி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் ஈரான் தயாராக இருப்பதாக அந்தத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லெபனான் உள்ளிட்ட பிராந்தியங்களில் நிலவும் மோதல்களையும் உள்ளடக்கிய விரிவான போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது குறித்தும் ஈரான் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, ஈரானின் இந்த ஏழு நாள் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக செப்டம்பர் 26ஆம் திகதி வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னைய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் தாக்குதல்களும் பொருளாதாரத் தடைகளும் தொடர்ந்ததால் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் முக்கியமான கடல்வழிப் பாதையாக விளங்குவதால், இப்பகுதியில் நிலவும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

Leave a Reply