அனுராதபுரத்தில் நடுவீதியில் நடந்த மோதல்! SLTB பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்!

அனுராதபுரத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13ஆம் திகதி மாலை, அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானேகம விஜயராம ஆலயத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து இலந்தகஹவெவ நோக்கியும், தனியார் பேருந்து கலா ஓயா நோக்கியும் பயணித்துள்ளன.

இதன்போது, இரு பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இணைந்து SLTB பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தனியார் பேருந்தைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

எனினும், குறித்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply