நுவரெலியாவில் திட்வா பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல்!

மலையகத்தில் திட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நுவரெலியாவில் நடைபெற்றுள்ளது.

நேற்று  மாலை 3.45 மணிக்கு நுவரெலியாவிலுள்ள கிராண்ட் ஹோட்டலில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் பிரிட்டிஷ் உயர் ஆணையர் மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, திட்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார இழப்புகள், தற்காலிக முகாம்களில் போதிய சுகாதார மற்றும் துப்புரவு வசதிகள் இல்லாமை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசரப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகால மறுவாழ்வு மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட தோட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் கண்டறிதல்களை முன்வைத்தனர். 

பாதிக்கப்பட்ட மக்களின் நில உரிமைகள், கல்வி மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த ஆதரவு அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக ஆதரவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயத் தயாராக இருப்பதாகப் பிரிட்டிஷ் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply