தந்தையை இழந்து தவிக்கும் நான்கு பிள்ளைகள்! -திருகோணமலையில் பெரும் சோகம்

திருகோணமலை – மாவிலாறு காட்டுப்பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஈச்சிலம்பற்று – பூநகர் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய இராசரத்தினம் நாகேந்திரம்  என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் மாவிலாறு காட்டுப்பகுதியில் மாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்த வழியிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று புதன்கிழமை (14) காலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ. நூருல்லா சடலத்தைப் பார்வையிட்டு மரண விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தை இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும் கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply