பௌத்த தேரர்கள் விவகாரத்தில் புதிய திருப்பம் – நீதிமன்றத்தை நாடிய கம்மன்பில!

அரசாங்கத்தின் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டித்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவது பௌத்த தேரர்களின் அடிப்படை உரிமையாகும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த தேரர்களை வெளியேற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விகாரமாதேவி பூங்காவில் பௌத்த தேரர்கள் முன்னெடுத்த சத்தியாகிரகப் போராட்டத்துக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆட்சேபித்து, நேற்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதத்துக்குப் பாதுகாப்பும் முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் விகாரமாதேவி பூங்காவிலும் பௌத்த தேரர்கள் அமைதியான முறையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலவரங்களையோ முரண்பாடுகளையோ தூண்டும் வகையில் செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு சட்டவிரோதமானது என்பதே தமது நிலைப்பாடு என உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply