முல்லைத்தீவு கடலில் காணாமல்போன மூன்று மீனவர்கள் தொடர்பில் அவர்களது குடும்பத்தினர் கவலையில் இருக்கும் நிலையில், “நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள்… உங்கள் உறவுகள் திரும்பி வருவார்கள்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியிலிருந்து கடந்த 26ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்களே காணாமல்போயுள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் காணாமல்போன மீனவர்களின் உறவினர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.
காணாமல்போன மூவரையும் தேடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உள்ளிட்ட தரப்பினரிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடற்படை மற்றும் விமானப்படையினர் உள்ளிட்ட தரப்பினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாத்தளன் கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் எட்டுப் படகுகளில் சென்ற குழுவினர், சுமார் 70 கிலோமீற்றர் தூரம் வரை கடலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், இன்றைய தினமும் மீனவர் சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள் இணைந்து மீண்டும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
இந்தத் தேடுதல் பயணத்தின்போது மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் கலந்துரையாடி, தேடுதல் அணியினருக்கான பாதுகாப்புச் சட்டைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கொண்டுள்ளார்.
காணாமல்போன மீனவர்கள் மூவரும் உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று மீனவர்களையும் தேடும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், அவர்களின் நிலை குறித்த மேலதிக தகவல்களுக்காக உறவினர்கள் காத்திருக்கின்றனர்.





