பிமல் ரத்நாயக்கவுக்கே மருத்துவச் சிகிச்சை தேவை! கம்மன்பில அதிரடிப் பதில்

அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தி வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பௌத்த மதம் தொடர்பில் அரசாங்க அமைச்சர்கள் வெளியிட்டுள்ள முரண்பாடான கருத்துக்களுக்கு பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று (02) எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், திசைகாட்டி அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிரானது அல்ல என்ற மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி முன்வைத்த கருத்தை முற்றாக நிராகரித்தார்.

அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிரானது என்பதை நிரூபிப்பதற்காகத் தாம் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முன்வைத்த 14 குறிப்பிட்ட காரணங்களை அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி பதவியேற்பின்போது பிரித் நூல் கழற்றப்பட்டமை, நாடாளுமன்றத்தின் மகா அமர்வில் ஜயமங்கல கீதம் நிறுத்தப்பட்டமை, ருவன்வெலிசேய வெறும் நினைவுச்சின்னம் என வர்ணிக்கப்பட்டமை மற்றும் ஸ்ரீ மகா போதியை விமர்சித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு அநுராதபுரம் புனித நகர அபிவிருத்திப் பொறுப்பு வழங்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களை அவர் இதன்போது பட்டியலிட்டார்.

இதற்கிடையில், ருவன்வெலிசேயவைச் சுற்றி வேலி அமைக்க முயற்சிப்பவர்கள் மனநோயாளிகள் என்றும் அவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருப்பதாகவும் பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்த கருத்துக்கும் கம்மன்பில பதிலளித்தார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ருவன்வெலிசேயவைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கம்மன்பில, பிரதி சுகாதார அமைச்சரின் வாதத்தின்படி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கே உடனடியாக மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனவும் சவால் விடுத்தார்.

அதேபோன்று, புனித நகர அபிவிருத்திப் பணிகளின்போது ருவன்வெலிசேய தோண்டப்பட்டு சேதப்படுத்தப்படும் எனத் தாம் கூறியதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர முன்வைத்த குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

அவ்வாறானதொரு கருத்தைத் தாம் தெரிவித்ததாக நிரூபிக்குமாறு சவால் விடுத்த அவர், தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதன் மூலம் ‘திசைகாட்டி என்றால் பொய்’ என்பதை அரசாங்கத்தினர் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் விமர்சித்தார்.

Leave a Reply