முல்லைத்தீவு – குமுழமுனையைச்சேர்ந்த நலன்புரி நன்மைகள் (அஸ்வெசும) கொடுப்பனவைப் பெறும் பயனாளி ஒருவருக்கு, 2023ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையில் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படாமலுள்ள 360,000.00ரூபாய் நலன்புரி நன்மைகள் தொகயை வரவு வைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுகோரி நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக்குழுவில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரேரணை ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் இக்கொடுப்பனவுகள் 2023,2024,2025 ஆகிய முன்னைய வருடங்களுக்குரியவை என்பதால் திறைசேரியின் விசேடஅனுமதியுடனும், மேலதிக நிதி ஒதுக்கீட்டுடனும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர்(நிதி) எஸ்.டீ.பீ.ஜே.பெரேராவினால் பதில் வழங்கப்பட்டுள்ளதுடன், உரிய நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் அக்கொடுப்பனவுகளை குறித்த பயனாளிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் 23.11.2026நேற்று பாராளுமன்ற குழு அறையில் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
குறிப்பாக நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக்குழுவிற்கு இரு பிரேரணைகளைச் சமர்ப்பித்திருந்தேன்.
அந்தவகையில் குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு எனக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதற்மைவாக நானும் குறித்த கூட்டத்தில் பங்தேற்றிருந்தேன்.
இந்நிலையில் பிரேரணை இலக்கம் 753இன் ஊடாக அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின்கீழ் பயனாளி ஒருவருக்கு உரித்தான நிலுவைக்கொடுப்பனவினை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.
குறிப்பாக முல்லைத்தீவு குமுழமுனையைச்சேர்ந்த எஸ்.சாமிலா என்னும் அஸ்வெஸ்ம நலன்புரி நன்மைகள் கொடுப்பனவைப் பெறும் பயனாளிக்குரிய, அஸ்வெஸ்ம கொடுப்பனவானது அவருடைய கணக்கிலக்கத்திற்கு நீண்டகாலம் வரவில்லை என என்னிடம் முறையிடப்பட்டதுடன், அந்த கொடுப்பனவைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டசெயலகம் உள்ளிட்ட தரப்புக்களையும் உரியவகையில்அணுகியதுடன், அதனைத் தொடர்ந்து நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக்குழுவிற்கு என்னால் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர்(நிதி) எஸ்.டீ.பீ.ஜே.பெரேரா எனது 753ஆவது பிரேரணைக்கு, இக்கூட்டத்தில் கடிதம்மூலம் பதில் வழங்கினார்.
அந்தவகையில் முல்லைத்தீவு குமுழமுனையைச் சேர்ந்த சாமிலா என்ற பயனாளியின் வங்கிக்கணக்கு இலக்கம் முறையானதாக இல்லாத காரணத்தினால், அது மூடப்பட்ட கணக்காகக் கருதி சம்பந்தப்பட்ட வங்கியால் நிராகரிக்கப்பட்டு நலன்புரி நன்மைகள் சபைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பதில் வழங்கப்பட்டுள்ளது. அதனாலேயே குறித்த பயனாளியால் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு குறித்த பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படாமல் மொத்தம் 360,000.00ரூபாய் நலன்புரி நன்மைகள் தொகை திருப்பி அனுப்பப்பட்டுளதாகவும் குறித்த பதில் கடிதத்தில் தெரவிக்கப்பட்டுள்ளதுடன், இக்கொடுப்பனவுகள் 2023,2024,2025 ஆகிய முன்னைய வருடங்களுக்குரியவை என்பதால் திறைசேரியின் விசேடஅனுமதியுடனும், மேலதிக நிதி ஒதுக்கீட்டுடனும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் அக்கொடுப்பனவுகள் குறித்த பயனாளிக்கு செலுத்தப்படும் எனவும் குறித்த கடிதத்தில் பதில் வழங்கப்பட்டுள்ளது.
அதந்தவகையில் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த பதிலை ஏற்றுக்கொள்வதாக நான் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.
அவ்வாறு இந்தப்பிரச்சினை தீர்த்து வைக்கத் தவறினால், மீண்டும் இப்பிரச்சினைதொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டுவருவேன் எனவும் ஜனாதிபதியிடம் இதன்போது தெரிவித்தேன் – என்றார்.




