அம்பாறை, தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம், மொரகஹப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
தமன, மொரகஹப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய கே. இந்திராணி மல்லிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் கழிவறைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது, வீட்டின் பின்புறத்தில் நின்றிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது.
இதன்போது யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கிராமத்தைச் சூழவுள்ள ‘நெல்லி கேளே’ வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியை உடைத்துக்கொண்டு காட்டு யானைகள் இரவு வேளைகளில் கிராமத்திற்குள் நுழைவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை – மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கிழக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.ஜி. விக்ரமதிலக்கவின் அறிவுறுத்தலின் பேரில், அம்பாறை மற்றும் தமனை வனஜீவராசிகள் கள அலுவலக உத்தியோகத்தர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




