ஹட்டன் அரச பேருந்து சேவைகள் முறையாக முன்னெடுக்கப்படாத நிலையில், சாமிமலை மற்றும் காட்மோர் பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, காலை வேளைகளில் குறித்த பகுதிகளில் இருந்து ஹட்டன் நோக்கி போதிய அரச பேருந்து சேவைகள் இடம்பெறாமையால், பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கிளங்கன் ஆதார வைத்தியசாலை மற்றும் மஸ்கெலியா வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளிகள், மாதாந்த மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லும் கிளினிக் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரச பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தினால், பயணிகள் அதிக நெரிசலுடன் இயங்கும் தனியார் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, தனியார் பேருந்துகளில் அதிகளவிலான பயணிகள் ஏற்றப்படுவதுடன், அதிவேகமாகவும் பேருந்துகள் செலுத்தப்படுவதால் பயணிகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, சாமிமலை மற்றும் காட்மோர் பகுதிகளில் காலை வேளைகளில் முறையான அரச பேருந்து சேவைகளை முன்னெடுப்பதுடன், தனியார் பேருந்துகளின் பயணிகள் ஏற்றும் அளவு மற்றும் வேகக் கட்டுப்பாடுகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




