மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அட்டைப்பண்ணை விவகாரம்- மனித உரிமை ஆணையாளருக்கு மகஜர்!

இன்று மதியம், கிராஞ்சி மக்களால், யாழ். மனித உரிமை அலுவலகத்தில், யாழ். மனித உரிமை ஆணையாளர் க.கனகராஜ்விடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

இவ் மகஜர் மூலமாக தெரியவருவதாவது,

அத்துமீறிய கடலட்டைப் பண்ணை அடைப்பும் பாரம்பரிய மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பானது,

மேற்படி விடயம் தொடர்பாக கிராஞ்சி மீனவ மக்களாகிய நாம் தங்களுக்கு அறியத்தருவது யாதெனில் கிராஞ்சி இலவன்குடா கடற்பரப்பில் ஏறத்தாழ 45 வருடங்களுக்கு மேலாக பாரம்பரியமாக சிறகுவலை மீன்பிடி முறைமையினை செய்து வருகின்றோம்.

அதேபோல் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த 60 வரையான பெண்கள் குறிப்பாக பண்ணை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நண்டு, இறால், மீன் மற்றும் அட்டை போன்றவற்றினை பிடிப்பதை தமது அன்றாட வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

தற்போது அட்டைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கடல் தாவரங்கள் அதிகம் காணப்படுகின்றது. அவ்விடங்களில் மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். அவ்விடங்களில் பண்ணை அமைக்கப்பட்டதால் மீன் இனங்களுக்கும் கரைக்குமான தொடர்பு தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரங்களில் வெளிச்சமுள்ள மின்விளக்குகள் காரணமாக மீன்கள் கரையை நோக்கி உணவு தேடி வரமுடியாத நிலை அடிக்கப்படும் அதிகூடிய ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் தொழிற்செய்யும் மீனவர்களின் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்றொழிலாளர் சங்கம், கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம், பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயம் ஆகியோருக்கு பலமுறை கடிதம் மூலமாக அறிவித்திருந்தோம்.

ஆனால் இதற்கான சரியான தீர்வு கிடைக்கப்பெறவில்லை அதற்கு மாறாக மேலும் பல அட்டைப்பண்ணைகள் பாரம்பரிய தொழில் புரியும் இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் படகுகள் சிறுவள்ளங்கள் சென்றுவரும் தரித்து நிற்கும் துறைமுகப்பகுதிக்குள் அட்டைப்பண்ணை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறாக அமைந்தள்ளது.

குறித்த பண்ணைகள் அமைக்கப்படுவதற்காக பாரம்பிய தொழில்கள் புரியாத இடங்கள் இருந்தும் நாம் தொழில் புரியும் பகுதிகளிலும் துறைமுகங்களிலும் பண்ணை அமைந்திருப்பது எந்த வகையில் நியாயமானது?

குறித்த பண்ணைகளானது ஆரம்பிக்கும்போது பாரம்பரிய தொழில்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படும் வகையில் அமையாது என கூறப்பட்டதற்கு மாறாக அமைக்கப்படுகின்றது. இரவோடு இரவாக அத்துமீறி பாரம்பரிய மீன்பிடி புரியும் இடங்களில் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒருசில முதலாளிகளின் நலனுக்காக ஒட்டுமொத்த மீனவர் சமூகத்தையும் சுடுகாட்டிற்கு அனுப்புகின்ற செயலாகவே கருதுகின்றோம். இவ் மனச்சாட்சியற்ற செயலுக்கு பாராமுகம் காட்டும் அமைப்புக்களிடமிருந்து எமக்கு நீதி கிடைக்காமைக்கான காரணம் என்ன? ஏழைகள் கடலுக்குள் இறங்கக்கூடாத? நாம் எந்த வகையில் எமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வது? இது தொடர்பாக நியாயம் கேட்ட மீனவர்கள் ஒருசிலரை பொய்யாக முறைப்பாடுகளை நீரியல் வளத்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்து சிறகுவலை முறைமையானது சட்டவிரோதமான தொழில் என அதிகாரியால் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வாறு பொய்யான முறைப்பாடுகளை போட்டு பாரம்பரிய தொழில் புரியும் இடங்களை விட்டு எம்மை அகற்ற நினைக்கின்றனர் – என்றுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *