
யாழ் துணை தூதரகத்தில் அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் யாழிலுள்ள இன்று மதியம் இந்திய துணைத்தூதுவர் சிறீ ராகேஷ் நட்ராஜ் அவர்களிடம் கையளித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதனைத், தொடர்ந்து, வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்பின் செயற்பாட்டாளர் லவகுசன் ஆஷா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்ததாவது ;
வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது கடந்த ஆவணி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையிலான 100 நாள் செயலமர்வினை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம் .இதில் குறிப்பாக வட,கிழக்கு தமிழ் மக்களின் கௌரவமான உரிமைகளுடன், கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்று சொல்லக்கூடிய மக்கள் குரலாகவே இது அமைந்திருந்தது.
இதனடிப்படையில் நாங்கள் நவம்பர் 8 ஆம் திகதி அன்று வட,கிழக்கில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும்,சிவில் அமைப்புக்களும் இணைந்து வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் எங்களின் தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் மீளப்பெற முடியாத வகையில் வட ,கிழக்குக்குள் சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வு வேண்டும் என்ற குரலை நாங்கள் முன்வைத்து பிரகடனம் செய்திருந்தோம்.
இது தொடர்பான பிரகடனத்தை இன்று நாங்கள் இந்திய துணைத்தூதரகத்துக்கு சென்று இந்திய துணைத்தூதுவரைச் சந்தித்து இது தொடர்பாக கலந்தாலோசித்திருந்தோம்.எமது இந்த தீர்வு விடயத்தில் முழுமையான பங்களிப்பை இந்தியா செய்ய வேண்டிய பொறுப்பு இருக்கின்றது என்ற விடயத்தினை வலியுறுத்தியிருந்தோம்.இதில் முக்கியமாக இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில், கடந்த யுத்த காலங்களைத் தாண்டியும் யுத்தம் நிறைவு பெற்ற இக்கால கட்டத்திலும் எமது வட,கிழக்கில் உள்ள நிலங்களாக இருக்கட்டும்,கலாசார விடயங்களாக இருக்கட்டும் அல்லது ஏனைய விடயங்களாக இருக்கட்டும் அனைத்தும் இந்த காலகட்டத்திலும் சுவீகரிக்கப்பட்டு போகின்ற இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகிறது.
எனவே, அரசிய தீர்வு கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த பிரச்சனைகளில் இருந்து தடுக்க முடியும் அதேபோல் கடந்த தேசிய இனப்பிரச்சனைக்கான நீதியை பெற முடியும் என்று தெளிவாக கூறியிருக்கின்றோம்.எங்கள் துணைத்தூதுவர் இது தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய துணைத்தூதரகத்துக்கும் ,டெல்லிக்கு ,எங்கள் தீர்வு தொடர்பான விடயங்களை தான் பகிர்ந்துகொள்ளுவதாக தெரிவித்திருந்தார்.என்றார்.





