அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சராகப் போவதாக அண்மைய நாட்களாக அனைத்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தற்போது எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தின் ஊடாக அமுல்படுத்தப்படும் “சீர்திருத்தங்களுக்கான விசேட கூட்டமொன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தகவல் தெரிவிக்கின்றது.
இலங்கையில் பாரம்பரிய கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்கள் குழுவுடன் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்நிகழ்வு நடந்ததாக அறியப்படுகிறது…
இதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கடந்த சில நாட்களாக ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை பாராட்டி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அவற்றை மறுப்பதற்கு ராஜித சேனாரத்ன எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று அமைச்சரவையை நியமித்த போது, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார உட்பட 20 ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவார்கள் என கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் ஊடக அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.
இவ்வாறு ஊடகவியலாளர்கள் ஒருதலைப்பட்சமாக செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல விஷேட ஊடக அறிக்கைகளை வெளியிட தயாராகி வருவதாகவும் அறியமுடிகின்றது.









