
இளம் சந்ததியினரை குறி வைத்து தீவிரமாக பரவிவரும் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையை கூண்டோடு அழிப்பதற்கு பாடசாலை மட்டம் மாத்திரமின்றி அனைவரும் கைகோர்த்து செயற்படுவதன் மூலமே வேரறுக்க முடியும்.
இவ்வாறு மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் அலுவலகத் திறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் யாழ்.மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில்,
உயிர்கொல்லி போதைப்பொருள் யாழ்.மாவட்டத்தில் மட்டுமன்றி நாடுமுழுவதுமே தீவிரமாக பரவிவருகிறது. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கோ கேட்ட விடயம் தற்போது எமது குடும்பத்தில் ஒருவருக்கு நிகழும் நிலைமையை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.
இதிலிருந்து எங்களுடைய எதிர்கால செல்வங்களான மாணவர்களை மீட்டெடுக்க அனைவரும் விழிப்பாக இருக்கவேண்டும்.
ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூக மட்டத்தில் தற்போது முழுவீச்சாக விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விடயத்தில் நீங்கள் அனைவரும் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எமது சமூகத்தினுடைய வறுமை உள்ளிட்ட பலவீனங்களை போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் பயன்படுத்துகின்றனர்.அவற்றை முறியடிக்க அனைவரும் கைகோர்ப்போம்– என்றார்.





