உலக நாடுகளில் இலங்கையில் தான் மிகமிக மோசமான அரச படைகள் உள்ளன! வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கண்டனம்

வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பு காணி அபகரிப்புக்கு எதிராக திரண்ட பெண்களை  காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளார்கள். இந்த அராஜகத்தை கண்டிப்பதுடன், இதனை சர்வதேச ரீதியில் எடுத்துச் சென்று உலக நாடுகளில் இலங்கையில் தான் மிகமிக மோசமான அரச படைகள் இருக்கின்றன என்பதை வெளிக்கொண்டு வருவோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பு காணி அபகரிப்புக்கு எதிராக திரண்ட பொதுமக்களின், பெண்களை சிங்கள அரசாங்கத்தின் காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளார்கள். 

இது ஒன்றும் புதியதல்ல ஏற்கனவே மார்ச் மாதம் மட்டுவிலில் எமது வயோதிப தாய்மாருக்கு நடந்த சம்பவம் போன்று தான் நடந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் வயதான பெண்களை அடிக்கப்பட்டார்கள், சப்பாத்துக் காலால் மிதிக்கப்பட்டார்கள் போன்ற அராஜகம் நடந்தேறியிருக்கிறது. அதேபோன்று இன்னமொரு அராஜகத்தை எங்களது தமிழ் மண்ணிலே காவல்துறையினர் நடாத்தியிருக்கிறார்கள்.

இதனை நாங்கள் மிக வன்மையாக கண்டிப்பதுடன், இது தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைளை எல்லோரும் ஒன்று சேர்ந்து எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் பேசும் மக்கள் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, மக்கள் தங்கள் எதிர்ப்பினை காட்டும் சுதந்திரம் கூட இல்லாத நிலைமையில் ஆளுநர் இதனை அனுமதித்திருக்கிறார் என்பது எமக்கு மிகவும் கவலையினைத் தரும் விடயமாக இருக்கிறது.

ஏனெனில் பொதுவாகவே இந்த தூதகராலயங்களில் தமிழ் உத்தியோத்தர் ஒருவர் எமக்கு சார்பாக நடப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவர் தமிழராக இருக்கும் பட்சத்திலே இது நடந்திருக்கிறது என்று எண்ணும் போது, இலங்கையில் எங்கும் தமிழர்களுக்கு ஒரு போராடும் உரிமையோ அல்லது வாழ்வதற்குரியோ உரிமையோ மறுக்கப்படுகிறது என்பது சர்வதேசத்திற்கு காட்டும் விதமாக உள்ளது.

எனவே இந்த அராஜகத்தை கண்டிப்பதுடன், இந்த அராஜகத்தை சர்வதேச ரீதியில் எடுத்துச் சென்று உலக நாடுகளில் இலங்கையில் தான் மிகமிக மோசமான அரச படைகள் இருக்கின்றன.

குறிப்பாக பொலிஸ் கூட இந்த அராஜகத்தைச் செய்யும் ஒரு பகுதியாக இருக்கின்றது என்பதை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று, இலங்கையின் சுயரூபத்தை சர்வதேசத்திற்கு வெளிக்காட்டுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மதகுருமார்கள் அனைவரும் ஒன்று திரண்டு இதை செய்ய வேண்டும் என்று மிக தயவாக கேட்டுக்கொள்ளும் அதேவேளை, இந்த பெண்களுக்கு நடந்த அராஜகம் தொடர்பில் விழிப்பாக சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவோம். – என்றார்.

Leave a Reply